Saturday, 9 April 2022

தமிழ் அணங்கு என்னும் அபத்தம்






தமிழ்த்தாயை அணங்காகச் சித்தரிக்கும் படம் ஒன்றை எல்லாரும் பார்த்திருப்பீர்கள். தமிழைப் பற்றிய புரிதல் கொஞ்சம் கூட இல்லாத சித்தரித்தல் அது. இதில் பாரதி பாரதமாதாவை சினம் கொண்டவளாகப் பாடியதால், ஏன் தமிழ்த்தாயும் அப்படி இருக்கக்கூடாது என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.  நம்முடைய மரபில் ஒவ்வொரு உருவகத்திற்கும் அதற்கான காரணம் உண்டு. பாரதமாதா சினம் கொண்டது, தான் அடிமைத்தளையில் சிக்கித்தவிக்கும் போது தம்முடைய புதல்வர்கள் அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோழைகளாக இருக்கின்றார்களே என்பதன் காரணமாக (பாரதியின் பார்வையில்). சாந்தமே உருவான அன்னை காளி உருக்கொண்டது தீயவற்றை அழிப்பதற்கு. சாதாரணமாக நாமே கோபத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் காரணமில்லாமல் கோபப்பட்டால் வீட்டில் உள்ளவர்களே ‘ஒரு மாதிரி’ பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். தமிழன்னைக்குக் கோபம் கொள்ள இப்போது எந்தக் காரணமும் இல்லை. அப்படியே கோபம் அடைந்தாலும் தலைவிரி கோலமாக வெள்ளை ஆடை உடுத்தெல்லாம் கோபமடையமாட்டாள். அது தமிழ் மரபில் அமங்கலத்தையே குறிக்கிறது. 


சரி அணங்கிற்கு வருவோம். தமிழ்த்தாய் எப்படி அணங்காக ஆக முடியும் ? அணங்கு என்றால் என்ன?. நம்முடைய சங்க இலக்கியங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். 


மலையில் உறையும் தெய்வத்திற்கு அணங்கு என்று பெயர். அந்தத் தெய்வம் மலையைக் காக்கும் பணியைப் புரிகின்றனவாம். 


அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்

பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை

அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண் (அகநானூறு)


இப்படி மலையைக் காக்கும் கடவுள் பெரும் வலிமை படைத்தவையாக இருந்ததாம். தமிழ் மரபில் காக்கும் தெய்வங்களும் உண்டு வருத்தும் தெய்வங்களும் உண்டு. இந்த அணங்கு என்பது வருத்தும் (துன்புறுத்தும்) தெய்வம். 


அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர் (மதுரைக் காஞ்சி)


கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக்காரிகை காண்மின் (பரிபாடல்)


அதாவது பார்ப்பவர்களை எல்லாம் தாக்கும் குணமுடையது இந்த அணங்கு என்ற தெய்வம். அதிலும் இளம்பெண்களைப் பிடித்துத் துன்புறுத்தக்கூடியது. 


மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை (அகநானூறு) 


மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் 

அணங்கு என அஞ்சுவர் சிறு குடியோரே (கலித்தொகை)


இரவில் வந்தால் மலையில் உறையும் அணங்கு என்று அஞ்சுவராம் குடிமக்கள். இப்படி அச்சமளிக்கும் அணங்கு வீரர்களின் ஆயுதங்களில் அமர்ந்து போரில் எதிரிகளைக் கொன்று குவித்து வெற்றி தேடியும் தருமாம் 


அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த

உரவு வில்மேல் அசைத்த கையை (கலித்தொகை)


இப்படி மற்றவர்களைத் தாக்கித் துன்புறுத்தி, இளம்பெண்களைப் பீடித்து, போர்த்தொழிலில் எதிரிகளைக் கொல்லும் குணமுடைய ‘அணங்காக’, மென்மொழியாளான தமிழ்த்தாயைச் சித்தரிப்பது எவ்வளவு கொடுமை. கல்வியை அளிக்கும் கலைமகளாகத் தமிழ்த்தாயைச் சித்தரிப்பதே நம் மரபு. கம்பனின் புகழை உலகெலாம் பரப்பிய கம்பன் அடிப்பொடி சா கணேசன், தமிழ்த்தாய்க்காக ஒரு கோவில் அமைத்தார். அதில் உள்ள தமிழ்த்தாயின் உருவமே மேலே காண்பது. அப்படிப்பட்ட தமிழ்த்தாயே நாம் வணங்கக் கூடியவள்.


(பி.கு. இதற்கிடையில் அந்தப் படம் தூமவதி என்ற தெய்வத்தின் உருவம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தூமாவதி என்ற தெய்வத்தைப் பற்றி கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்)

Tuesday, 28 December 2021

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

திருப்பாவைக்கு அருமையாகவும் வித்தியாசமாகவும் பிஏகே அவர்கள் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார். அதில் இன்று படித்த உரை சற்று இடறியது. இன்றைய பாசுரத்திற்குப் பொருள் சொல்லும் போது ஆண்டாளின் காலத்தைப் பற்றி அறிஞர் மு ராகவய்யங்கார் எழுதிய குறிப்பை அவர் தந்திருக்கிறார். அதில் "பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார்" என்றும் "வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731" என்றும் உள்ளது.



நான் ராகவய்யங்கார் கட்டுரையைப் படித்ததில்லை என்பதால் இந்தக் குறிப்புகளில் சில குழப்பங்களைக் காண நேர்ந்தது. பாண்டியன் (பராந்தக) நெடுஞ்சடையனும் சீமாறன் சீவல்லபனும் ஒரே ஆள் இல்லை என்பது ஒரு புறம். பொயு 731ல் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் ராஜசிம்ம பாண்டியன். அவனும் சரி, அவன் தந்தை கோச்சடையன் ரணதீரனும் சரி வைணவர்களாக அறியப்படவில்லை. சொல்லப்போனால் கோச்சடையன் காலத்தில் சுந்தரர் மதுரைக்கு வந்ததும், அவரோடு ரணதீரன் பல கோவில்களுக்குச் சென்றதும் பெரிய புராணத்தில் சொல்லப்படுகிறது. பெரியாழ்வாரும் சரி, ஶ்ரீ ஆண்டாளும் ஶ்ரீமாற ஶ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் (பொயு 835 - 862) வாழ்ந்தவர்கள் என்பது நீலகண்ட சாஸ்திரி, கோபிநாத ராவ், நாகசாமி போன்ற ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றித் தெளிவாக கல்வெட்டுச் சான்றுகளுடன் என்னுடைய பாண்டியர் வரலாறு புத்தகத்தில் விளக்கியிருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க, வெள்ளி ஒரு புறம் எழ, வியாழன் மேற்கு திசையில் மறைவது என்ற நிகழ்வைப் பார்ப்போம். வெள்ளி, அதாவது சுக்கிரன், சூரியனுக்கு அருகிலேயே செல்லும் ஒரு கிரகம். பெரும்பாலும் சூரியனுக்கு முதல் ராசியிலோ, அதனுடனோ அல்லது சூரியனுக்கு அடுத்த ராசியிலோதான் வெள்ளி இருக்கும். இதனால்தான் சில சமயம் வெள்ளி அதிகாலை கிழக்குத் திசையிலும் சில சமயம் மாலையில் மேற்கு திசையிலும் தென்படுகிறது. அப்படி அதிகாலையில் வெள்ளி உதிக்கும்போது வியாழன் மேற்கில் மறைய வேண்டுமானால் அது ஆறு ராசிகள் முன்னால் இருக்கவேண்டும். மார்கழியில் சூரியன் இருப்பது தனுசு ராசியில். அதற்கு முந்தைய ராசியான விருச்சிகத்தில் வெள்ளி இருக்கும்போது, வியாழன் மேஷத்திலோ அல்லது ரிஷபத்திலோ இருக்கும் போது இந்த நிகழ்வு நடைபெறும். 

பொயு 731, டிசம்பர் 18ம் தேதியில் வியாழன் ரிஷபத்திலும் வெள்ளி விருச்சிகத்திலும் இருப்பதால் இந்த நிகழ்வு நடந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் இந்தத் தேதியில் மேற்சொன்ன காலக்கணக்கைத் தவிர மேலும் சில சிக்கல்கள் உள்ளன. பொயு 731, டிசம்பர் 18 என்பது மார்கழி 19ம் நாள். இன்றைய பாட்டோ மார்கழி 13ம் நாள் பாட்டு. ஒரு வேளை எண்ணிக்கை பின்னாளில் மாறியிருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும் அவ்வருடம் மார்கழி தேய்பிறை அஷ்டமியில் பிறந்திருக்கிறது. அப்படியிருக்க அதை மதி 'நிறைந்த' நன்னாள் என்று ஆண்டால் பாடியிருப்பாரா என்பது கேள்விக்குறி.

இப்போது ஶ்ரீமாற ஶ்ரீவல்லபனின் காலத்தில் எப்போது இந்நிகழ்வு நடந்தது என்பதைப் பார்ப்போம். பொயு 835லிருந்து பொயு 862 வரை இந்நிகழ்வு 837 & 861ம் ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆனால் 837லும் தேய்பிறை அஷ்டமியைத் தாண்டி மாதம் பிறந்திருக்கிற காரணத்தால், அதையும் புறந்தள்ளிவிடலாம். பொயு 861ல் மாதம் தேய்பிறை சதுர்த்தியில் பிறந்திருக்கிறது. அவ்வருடமும் வெள்ளி விருச்சிகத்திலும் வியாழன் ரிஷபத்திலும் அந்த நாளில் இருந்திருக்கிறது. தேய்பிறை சதுர்த்தி. சந்திரன் ஓரளவுக்கு முழுவெளிச்சத்தையும் தருகிற நாள் என்பதால், அந்த வருடத்தையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆகவே டிசம்பர் 12 (அவ்வருடத்தின் மார்கழி 13), பொயு 861 என்ற வருடமே ஆண்டாளின் இன்றைய பாசுரமான புள்ளின் வாய் கீண்டானை என்ற திருப்பாவை பாடப்பட்ட தினமாகக் கொள்ளலாம்.

இந்தக் கணக்கிற்கு உதவிய Jagannath Hora செயலிக்கு நன்றிகள்.



Wednesday, 1 December 2021

எது தமிழ்ப் புத்தாண்டு 2.0

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை. 

மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல சொற்கள் மதத் தொடர்பானவைகளாக இருக்கலாம். அதனால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியது என்று ஒதுக்குவது முறையாகாது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த மக்கள் தனித்தனி நாட்குறிப்பு முறைகளையே பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை. 

இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் பயன்படுத்தும் நாட்காட்டி முறைகளைப் பற்றி சிறிது ஆராயலாம். 

இந்திய நாட்குறிப்பு முறை

இந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது  என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. அடிப்படையில் இந்திய நாட்குறிப்பு முறைகளை இரண்டு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை (ஸுர்யமானம்), சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை (சந்திரமானம் ) 

இப்போது நாட்குறிப்பு முறையின் சில அடிப்படை வானியல் குறிப்புகள். (இங்கே எங்களுக்கு வானியல் முறைகளும் நட்சத்திரங்கள், ராசிகள், அவைகளைப் பின்புலமாகக் கொண்டு கோள்களின் நகர்வைக் கணிக்கும் முறையைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும் என்போர் இரண்டு பத்திகள் தாவி விடவும்.) ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்களை / ஆண்டுகளை கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். . ஆனால் தினமும் நகர்ந்து கொண்டிருக்கும் இவை இரண்டையும் வைத்து எப்படி நாட்களைக் கணிப்பது ? 

அதற்கு வானில், பின்புலத்தில் ஓரளவு அசையாமல் கிட்டத்தட்ட இருந்த இடத்திலேயே (கண்பார்வைக்கு) நிலைத்திருந்த விண்மீன்கள் கை கொடுத்தன. சூர்ய, சந்திரர்களின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள் (இவற்றின் பெயர்களை ஜோதிடமும் உபயோகப்படுத்துவதால் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இங்கு நாம் பார்ப்பது வானியல் மட்டுமே).  சூரியனும் சந்திரனும் பூமியிலிருந்து பார்க்கும்போது நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றி வருவது போல் தெரியும். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர். கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. மேஷம்  .. என்ற பெயரில், சிம்மம் என்ற பெயரில். அந்த நீள்வட்டப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஆக, ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும் 

இங்கு கவனிக்க வேண்டியது, இந்த முறை கணக்கிடுவதற்காக மட்டுமே. மற்றபடி சூரியனையே மற்ற கோள்கள் சுற்றி வந்தன என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். 

“வானிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த விளங்குகதிர் ஞாயிறு"
என்கிறது சிறுபாணாற்றுப்படை.

ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் போது மேட வீதி, இடப வீதி, மிதுன வீதி ஆகிய மூன்று வீதிகளில் சூரியன் செல்வது போல் தோன்றும். இந்த மூன்று வீதிகளையும் “எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து, தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்” என்று குறிப்பிடுகிறது பரிபாடல்.

இப்போது மீண்டும் நாட்குறிப்பு முறைகளுக்கு வருவோம். சூரிய நாட்குறிப்பு முறையை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், மலையாளிகள், ஒரிசா மாநிலத்தவர்கள், வங்காளிகள். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாளை மாதத்தின் முதல் நாளாகக் கணக்கிட்டனர். பன்னிரண்டு ராசிகளுக்கும் முதலாவதாக மேஷ ராசியை அமைத்தனர். ஏன் மேஷ ராசி முதலாவதாக ஆனது. பாதை நீள்வட்டமாகத்தானே இருக்கிறது? இதில் முதலாவது எது முடிவானது எது? 

சூரியன் பூமியைச் சுற்றி நகரும் நீள்வட்டப் பாதையில் விண்மீன்கள் அமைந்திருப்பதாகப் பார்த்தோம் அல்லவா. சூரியன் பயணம் செய்யும் அந்தப் பாதையை ஒரு கோடாக உருவகித்தால் எல்லா விண்மீன்களும் அந்தப் கோட்டில் இருக்கவில்லை, மாறாக அதன் இருபுறத்திலும் அமைந்திருந்தன. அந்தப் பாதையிலேயே இருந்த சில விண்மீன்களில் முக்கியமானது அஸ்வினி என்ற பெயருடைய விண்மீன். சூரியன் பயணம் செய்கின்ற நீள்வட்டப்பாதையின் மத்தியில் அமைந்துள்ளது இது. இந்திய நாட்குறிப்புக் கணக்கீடும் முறை உருவான சமயத்தில் (கிட்டத்தட்ட பொ.யு. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில்) வேனில் சமநாள், அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள் சூரியன் அஸ்வினி மீனில் இருந்த போது வந்தது. காலப்போக்கில் பூமியின் அச்சு நகர்ந்து வந்ததில் காரணமாக அது மேற்கு நோக்கி இடம் மாறி தற்காலத்தில் மார்ச் 22ம் தேதியாக கணிக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து தான் இளவேனில் காலம் துவங்கியது. இந்தக் காரணங்களால் அந்த விண்மீன், நீள்வட்டப் பாதையின் ஆரம்பப் புள்ளியாகவும், அது இடம்பெற்றிருந்த ராசியான மேஷம் ராசிக்கட்டத்தின் முதல் ராசியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகின் மற்ற ராசி வரிசைகளிலும் மேஷத்திற்குத் தான் முதலிடம்.  ஆங்கில Zodiac வரிசை கூட Aries லிருந்துதான் தொடங்குகிறது. 

தமிழர்களுக்கும் அப்படித்தான் 

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து" என்கிறது நெடுநல்வாடை. 

“வருடையைப் பணி மகன் வைப்ப” என்கிறது பரிபாடல். இங்கே வருடை என்பது ஆடு. அதிலிருந்துதான் வருடம் என்ற பெயர் வந்தது. ஆகவே மேஷத்தை முதலாவதாகக் கொண்டே நம்முடைய நாட்கணக்கும் தொடங்குகிறது.

மேஷம் முதல் ராசியாதலால் அந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள் ஆண்டின் முதல் நாளாகக் கணக்கிடப்பட்டது. எனவே சூரிய நாட்குறிப்பு முறையைப் பின்பற்றுவோர் அனைவருக்கும் சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் நாளே புத்தாண்டு. சரி, அப்படியானால் புத்தாண்டு துவங்கும் நேரம் அனைவருக்கும் சமமாக இருக்கிறதா என்றால், இல்லை. சூரிய நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து நான்கு வேறுபட்ட புத்தாண்டுத் துவக்கங்கள் உள்ளன. 

ஒரியா முறை  - இந்திய முறையில் ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள 24 மணி நேரம் ஆகும். இந்த ஒரு நாளில் சூரியன் எந்த நேரத்திலும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்ந்தால் அதுவே அந்த மாதத்தின்  துவக்கமாக (மேஷ ராசியாக அது இருந்தால் அது ஆண்டின் துவக்கமாக) கொள்ளப்படும் 

தமிழர் முறை - சூரியன் அந்த நாளின் சூரிய அஸ்தமானதிற்குள் இடம் பெயர்ந்தால் அன்றே அந்த மாதம் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இல்லையேல் அடுத்தநாள் தான் மாதத்தின் முதல் தேதி. 

மலையாள முறை - சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமானதிற்குள் உண்டான நேரத்தில் ஐந்திலிருந்து மூன்று பங்கு நேரத்திற்குள் சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும் இல்லையேல் அடுத்தநாள் தான்.

வங்காள முறை - சூரிய உதயத்திலிருந்து அன்று நள்ளிரவு வரை சூரியன் இடம் பெயருமானால், மாதத் துவக்கம் அந்த நாளில் வரும்.


இவ்வாறு சூரிய நாட்குறிப்பு முறைகளிலேயே நான்கு வேறுபட்ட மாத / ஆண்டுத் துவக்கங்களின் கணக்கிடு முறைகள் உள்ளன. குறிப்பாக இவை ஒரே மதத்தை / மொழியை  சார்ந்து இல்லாமல் அந்த அந்தப் பகுதிகளுக்கு உரித்தனவைகளாக உள்ளன என்பதைக் கவனிக்கவேண்டும்.

இப்போது ஆண்டுகளுக்கு வருவோம், தமிழர் நாட்குறிப்பு முறையில் 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப் படுகிறது. இது என்ன காரணத்தால் ? வானில் தெரியும் கோள்களில் மெதுவாக நகரும் கோள்கள் இரண்டு. வியாழனும் சனியும் தான் அவை. வியாழன் சூரியனைச் சுற்றி வர சுமார் பன்னிரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்று கணித்தனர் அன்றைய வானவியலாளர். ஆனாலும் பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் தான் ஆரம்பித்த இடத்திற்கு (ஆரம்பப் புள்ளிக்கு)  வியாழன் வருவதில்லை. அவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளிக்கு அது மீண்டும் வர 60 ஆண்டுகள் ஆகும் என்றும் கணித்தனர் (அதாவது 5 தடவை சூரியனைச் சுற்றிவந்தால் அது தன் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வருகிறது). இதை வைத்து 60 ஆண்டுச் சுழற்சியை ஏற்படுத்தினர். (துல்லியமாகச் சொல்லவேண்டுமானால் வியாழன் அதே இடத்திற்கு திரும்ப வரும் காலம் 83.02 ஆண்டுகள், தற்கால வானவியல் உப காரணங்களின் கணிப்புப்படி) அதே போல் சனி கிரகம் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. 60 ஆண்டுகளில் அது இருமுறை சூரியனைச் சுற்றி வந்துவிடும். இதனால் 60 ஆண்டு காலக்கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பொ. வ. ஆறாம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் வந்தது. ஆனால் இந்தியாவில் எல்லா இடத்திலும் இந்த 60 ஆண்டுச் சுழற்சி முறை பின்பற்றப்படுவது இல்லை. தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் மட்டுமே இம்முறை பின்பற்றப்படுகிறது. சீனாவிலும் இது போன்ற 60 ஆண்டு சுழற்சி முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சரி, இந்த 60 ஆண்டு முறையை மட்டுமா தமிழர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் இல்லை. கலி வருடம் என்ற நீள் நாட்குறிப்பு முறையையும் பின்பற்றுவோர் உண்டு. இது கலியுகம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது. கலியுகம் பொ.வ.மு 3102ம் ஆண்டு துவங்கியதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் இப்போது நடக்கும் கலி ஆண்டு 5117. தமிழர்களைத் தவிர கலி ஆண்டை இந்தியாவில் பின்பற்றுபவர்கள் அஸ்ஸாமியர்களும், வங்காளிகளும் மட்டுமே.

கல்வெட்டுகள்

கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டால், தமிழர்களுடைய ஆரம்ப காலக் கல்வெட்டுகளில் சக வருடத்தையும் கலி வருடத்தையும் குறிப்பிடும் கல்வெட்டுகளைக் காணலாம். ஆனால், மாதங்களைக் குறிக்கும் போது அந்த மாதத்திற்கு உரிய ராசிப் பெயர்களையே (மேட ஞாயிறு, இடப ஞாயிறு) குறிப்பிட்டிருக்கின்றனர். இதிலிருந்து ராசிகளை வைத்தே ஆண்டுக்கணக்கு இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 


பிற்காலச்சோழர்களின் காலத்திலிருந்து, வியாழன் சுழற்சியைக் கணக்கில் கொண்டு தற்போது வழங்கும் சமஸ்கிருதத்தில் அமைந்த ஆண்டுப்பெயர்கள் குறிப்பிடப்பட்டன. கர்நாடகாவில் உள்ள பலமுரி அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒன்று "சகவருஷ 934 நேய பரிதாவி ஸம்வத்ஸரகே" என்று பரிதாபி வருடப் பெயரைக் குறிப்பிடுகிறது. போலவே வீர ராஜேந்திர சோழனின் சாரலா செப்பேடு "சௌம்ய ஸம்வத்ஸரத்து" என்று சௌம்ய ஆண்டுப் பெயரைக் குறிப்பிடுகிறது. 


அதற்குப் பின்னால் வந்த கல்வெட்டுகளில் பெரும்பாலும் இந்தப் பெயர்களே குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றன. 



இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் பின்பற்றி வந்தது சூரியன் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மேஷத்தை அதாவது சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட ஆண்டுகளே. 






Friday, 5 November 2021

சிலப்பதிகாரத்தின் காலம் - 3



சென்ற பகுதியில் கோவலனும் கண்ணகியும் மே 8, 130ம் ஆண்டு புறப்பட்டு கவுந்தியடிகளோடு மதுரை சென்றார்கள் என்று பார்த்தோம். ஆங்காங்கே தங்கி அவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர் என்று இளங்கோவடிகள் கூறுகிறார். இப்படி அவர்கள் உறையூர் வந்து அங்கே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து மதுரை செல்லும் வழிகளைப் பற்றிக் கேட்கின்றனர். அவன் கொடும்பாளூரிலிருந்து சிவபெருமானின் சூலாயுதம் போல மூன்று வழிகள் மதுரை நோக்கிச் செல்கின்றன என்று கூறுகிறான். ஒன்று தற்போதைய ரயில் பாதை, அதாவது திண்டுக்கல் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழி, இரண்டு நத்தம், திருமாலிருஞ்சோலை வழியாக மதுரை செல்லும் வழி. மூன்று மேலூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதைய தேசிய நெடுஞ்சாலை). இதில் மூன்றாவது வழியைத் தேர்ந்தெடுத்து பயணிகள் செல்கின்றனர். இடைப்பட்ட காலக்குறிப்புகள் அவ்வளவு தெளிவாக இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 11, 130

புகாரிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மாதப் பயணத்திற்குப் பிறகு அவர்கள் பாண்டிய நாட்டில் உள்ள ஒரு பாலை நிலத்தை அடைகின்றனர். இது மேலூருக்கு அருகில் உள்ள பகுதியாக இருக்கக்கூடும். இன்னும் இது வறண்ட நிலமாகவே உள்ளது. காலை 'செங்கதிர் வெம்மையின் தொடங்க', வெய்யில் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள ஐயையின் கோட்டத்தை அடைகின்றனர். இது எந்தக் கோவில் என்பது ஆய்வுக்குரியது. அங்கே வேட்டுவ வரி நிகழ்கின்றது. மாலை வருகிறது. அதன்பின் கவுந்தியடிகள் கண்ணகியிடம் ஆறுதல் சொல்லத்தொடங்கி " வேனில் திங்களும் வேண்டுதி" என்கிறார். அதாவது இளவேனிலின் பொழுது கணவனைப் பிரிந்து இருந்த உனக்கு இந்த முதுவேனில் சந்திரன் வேண்டும் போலும் என்கிறார். இதிலிருந்து அது முதுவேனில் என்பது தெளிவாகிறது (ஆனி -ஆடி முதுவேனில் காலம்). இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால் 'குடும்பத்தில் குழப்பம்' வந்துவிடும் என்பதைக் கண்ட கோவலன் சரி கிளம்பலாம் என்று சொல்கிறான். இரவு முழுவதும் நடந்து காலையில் 

"கான வாரணம் கதிர் வரவு இயம்ப" ....கோழி கூவும் வேளையில் "மறைநூல் வழக்கத்துப் புறைநூல் மார்பர் உறை பதி" - அந்தணர்கள் வாழும் ஒரு ஊரைச் சென்று அடைகின்றனர். வேதபுரி என்ற பெயரில் அழைக்கப்பட்ட திருவாதவூராகவே இது இருக்கக்கூடும். 

ஜூலை 12, 130

கண்ணகியையும் கவுந்தியடிகளையும் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு கோவலன் நீர்க்கடன்களை அளிக்க நீர்நிலை ஒன்றைத் தேடிச் செல்கிறான். அங்கே கௌசிகன் என்ற வேதியனைப் பார்க்கிறான். 'பாசிலைக் குருகின் பந்தலைப் பொருத்தி' - குருக்கத்தி இலைகளால் ஆன நிழலில் இருவரும் உரையாடுகின்றனர். பூக்களெல்லாம் உதிர்ந்ததால் குருக்கத்தி உள்ள நிழல், அதாவது முதுவேனில் என்பது இவ்வரிகளால் மேலும்  உறுதியாகிறது. அதன்பின் கோவலன் திரும்பி வந்து பாணர்களோடு அன்றைய பொழுதைக் கழிக்கிறான். அவர்களிடம் மதுரை எவ்வளவு தொலைவு என்று கேட்க, நகரின் வாசம் இப்போது காற்றில் வருவதால் அருகில்தான் இருக்கிறது என்று பாணர்கள் கூற. 'முன் நாள் முறைமையின் இருந்தவ முதல்வியோடு' - முதல் நாளைபோலவே இரவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். அடுத்த நாள் அதிகாலையில் மதுரையின் எல்லையை அடைகின்றனர். 

ஜூலை 13, 130

ஊருக்கு வெளியில் உள்ள புறஞ்சேரி ஒன்றில் மூவரும் தங்குகின்றனர். சூரியன் உதிக்கிறது. கோவலன் கவுந்தியடிகளிடம் அனுமதி கேட்டு மதுரையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்புகிறான். இங்கே இரண்டு குறிப்புகள் வருகின்றன.

"குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின்" அதாவது மேல் திசையிலிருந்து காற்று வேகமாக வீசுகிறது. அதனால் கொடிகள் அசைகின்றன. ஆகவே தென்மேற்குப் பருவக்காற்று வேகமாக வீசும் ஆடி மாதம் அது என்பது தெளிவாகிறது. மேலும் 

"வேனில் வேந்தன் வேற்றுப் புலம் படர

ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள்"

என்கிறார் இளங்கோவடிகள். வேனில் காலத்தில் அரசன் வேறு இடத்திற்குச் செல்லவிருக்கின்ற கடை நாள், அதாவது முதுவேனிலின் கடைசிப் பகுதி என்கிறார். ஆடி மாதக் கடைசி இது என்பது இந்த ஜூலை 13ம் தேதிக்குப் பொருந்தி வருகிறது. ஆவணி அவ்வருடம் 23ம் தேதி பிறந்துவிடுகிறது  

மாலை வீடு திரும்புகின்ற கோவலனையும் கண்ணகியையும் ஆயர் குல மகளான மாதரியிடம் அடைக்கலமாக ஒப்புவிக்கிறார் கவுந்தியடிகள். மாதரி ஒரு வீட்டை அவர்களுக்கு ஒதுக்குகிறாள். கண்ணகி இரவு உணவு சமைத்துப் போடுகிறாள். அன்று இரவே கோவலன் சிலம்பை விற்கப் புறப்படுகிறான். பொற்கொல்லன் வஞ்சம் செய்ததும் அதனால் கோவலன் இரவோடு இரவாகப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்த விஷயம்.

ஜூலை 14, 130

காலையில் கண்ணகியிடம் செய்தி சொல்லப்படுகிறது. கோவலனைப் பார்த்துக் கதறுகிறாள். அதன்பின் அவன் உயிர்பெற்று வானுலகம் செல்கிறான். பிறகு கண்ணகி பாண்டியன் அரண்மனை செல்கிறாள். அங்கே வழக்கு நடைபெறுகிறது. உண்மை தெரிந்து பாண்டியனும் பாண்டிமாதேவியும் உயிர் துறக்கின்றனர்.  கண்ணகி வஞ்சினம் உரைக்கிறாள். அந்தநாள் தான் 

ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து, அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று, வெள்ளி வாரம்

இது ஜூலை 14, 130க்கு பொருந்தி வருவதைப் பார்த்தோம். ஆகவே இதுவரை காலக்கணக்குச் சரியாகவே வருகிறது. 

இதன்மூலம் சிலப்பதிகாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பொயு 130ல் நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இது சிலம்பின் காலத்தை சுட்டியது மட்டுமல்லாமல், சங்க காலப் பாண்டியர் வம்சத்தின் கால வரிசையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்  


சிலப்பதிகாரத்தின் காலம் - 2

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் நடந்த காலத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அக்காப்பியத்தில் வந்த வானியல் குறிப்பை வைத்து மதுரை எரிக்கப்பட்ட நாள் ஜூலை 14, 130 என்பதையும் அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தனி மரம் தோப்பாகாது அல்லவா. ஆகவே சிலம்பில் உள்ள மற்ற குறிப்புகளை வைத்துக்கொண்டு அவை இந்த வருடத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய முனைந்தேன். அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்




கண்ணகியும் கோவலனும் "மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட"  திருமணம் செய்து கொள்வதோடு தொடங்குகிறது இந்தக் காப்பியம். அவர்கள் சில ஆண்டுகள் இன்புற்று வாழ்ந்தனர் என்பதை "உரிமைச் சுற்றமோடு....யாண்டு சில கழிந்தன" என்று சொல்லி விட்டுவிடுகிறார் இளங்கோ அடிகள். அதன் பின் அரங்கேற்று காதையில் கோவலன் மாதவியின் மாலையைப் பெற்று அவளோடு போய் விடுகிறான். அங்கும் சில ஆண்டுகள் அவர்கள் இருவரும் வாழ்ந்திருக்கக் கூடும். ஏனெனில் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, அதற்கு தன்னைக் காத்த தெய்வமான மணிமேகலையின் பெயரை வைத்து மகிழ்கிறான் அல்லவா. ஆனால், எத்தனை ஆண்டுகள் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. 

அதன்பின், ஒரு வருடத்தில் இந்திரவிழாவிற்கான அறிவிப்பு வெளியாகிறது. சிலம்பில் அதற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அந்த ஒரே ஆண்டில் நடந்தேறிவிடுகின்றன. நாம் பார்த்த பொயு 130க்கு அந்தக் குறிப்புகள் எல்லாம் சரியாக வருமா என்பதைப் பார்க்கவேண்டும். முதலில் இந்திர விழா தொடங்கும் நாள் "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென" என்று இளங்கோவடிகள் விழாவுக்கான கொடியேற்றுத் திருநாள் நடந்த தினத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி வரும் நாள்.  இது ஒரு அபூர்வமான நிகழ்வு அல்ல என்றாலும் சில சமயம் ஹஸ்த நட்சத்திரத்திலும் அல்லது சுவாதி நட்சத்திரத்திலும் கூட பௌர்ணமி வருவதுண்டு. பொயு 130ம் ஆண்டு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று பௌர்ணமி வந்திருக்கிறது. 


அதாவது ஏப்ரல் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.   ஆகவே இதற்கு ஒரு டிக் போட்டுக்கொண்டு மேலே நகர்வோம். (சதுர்த்தசி என்று எழுதியிருப்பதைப் பார்த்து குழம்பவேண்டாம், அது மதியம் வரைதான் அதன் பின் பௌர்ணமி வந்து விடுகிறது). இந்த வருடமும் அப்படித்தான் வந்திருக்கிறது.



இந்திர விழா எத்தனை நாட்கள் நடந்தது என்பதைப் பற்றிய குறிப்பு சிலம்பில் இல்லை. ஆனால் அதன் இரட்டைக் காப்பியமான மணிமேகலையில் "விழாக்கோள் எடுத்த நாள் ஏழ் நாளினும்" என்ற குறிப்பு உள்ளது. அதாவது கொடி ஏற்றி இருபத்து எட்டு நாட்கள் இந்த விழா நடந்திருக்கிறது. அதன்படி ஏப்ரல் 9, 130ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்திர விழா மே 6, 130 வரை நடந்திருக்கிறது. அதாவது வைகாசி மாதம் மையப்பகுதி வரை. மே 6 தான் நிறைவு நாளான கடல் ஆடு விழா. இப்போதும் கோவில் விழாக்களில் நிறைவு நாள் 'தீர்த்தவாரி' உற்சவமாகக் கொண்டாடப்படுவதைப் பார்க்கலாம். அதன்படி மே 6ம் தேதி நடந்த கடலாடு விழாவில் கலந்து கொண்டு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் செல்கிறார்கள். அங்கே கானல் வரி நிகழ்கிறது. கோவலன் சண்டை போட்டுக்கொண்டு "பொழுது ஈங்குக் கழிந்தது" என்று தனியே சென்று விடுகிறான். அதனால் மாலை நேரத்தில் அவன் கிளம்பியிருக்கலாம் என்று கருதலாம். மாதவியும் வீடு திரும்பிவிடுகிறாள். அன்று இரவு முழுவதும் காத்திருக்கிறாள். 

மே 7, 130

இளவேனில் காலம் மாதவியை வாட்டுகிறது. "இன் இளவேனில் வந்தது காண்" என்கிறார் இளங்கோ.  தமிழர் காலக் கணக்குப் படி சித்திரையும் வைகாசியும்  இளவேனில் காலம். மதிய உணவு வரை கூட கோவலன் வீடு வரவில்லை என்பதால் கவலை கொண்டு தன் தோழியான வசந்த மலையைத் தூது அனுப்புகிறாள். மாதவியைப் பிரிந்து சென்ற கோவலன் உடனே கண்ணகியிடம் திரும்பச் செல்லவில்லை என்பது தெரிகிறது. இரவு முழுவதும் ஏதாவது மண்டபத்தில் தங்கியிருந்திருக்கக்கூடும். மறு நாள் வெறுப்போடு அலைந்து கொண்டிருந்த கோவலனை வசந்தமாலை கடைத்தெருவில் சந்திக்கிறாள். மாதவி கொடுத்த ஓலையை வசந்த மாலை "கூல மறுகின் கோவலற்கு அளிப்ப" ...அவன் அதை மறுத்து விட்டுச் சென்று விடுகிறான். அதை மாதவிக்குத் தெரிவித்த வசந்த மாலை "மாலை வாரார் எனினும் ...காலை காண்குவாம்" - மாலை வந்துவிடுவான் இல்லையென்றால் காலை வருவான் என்று ஆறுதல் சொல்கிறாள்.

ஆனால் கோவலன் வேறு மாதிரிச் சிந்திக்கிறான். இந்த ஊரில் இனிமேல் இருந்தால் மாதவி தொடர்ந்து தொந்தரவு தரக்கூடும். ஊர்ப் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை அவன். சோழ மன்னரிடம் மாதவி 'Haressment Case' கொடுத்துவிட்டால் பெருத்த அவமானம். குழந்தையை வேறு கொடுத்துவிட்டான். ஆகவே உடனே ஊரை விட்டுச் செல்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்த அவன், கண்ணகி வீட்டிற்குச் செல்கிறான். முன்னிரவு நேரம், தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிற நேரத்தில் போய்ச்சேருகிறான். இருவரும் படுக்கையறையில் சந்திக்கின்றனர். "பாடு அமை சேக்கையிட் புக்கு" என்று இதை அடிகள் குறிப்பிடுகிறார். சுருக்கமாக நாலேவரிகளில் தன் செய்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உடனடியாக மதுரைக்குப் புறப்படவேண்டும் என்று சொல்கிறான். பெண் விஷயத்தில் மாட்டிக்கொண்டால் இப்படித்தான் உடனே கிளம்பவேண்டியிருக்கும் என்பதை கண்ணகி "நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி சிலம்பு உள" என்று சொல்லாமல் சொல்கிறாள். இப்போது அடுத்த வானியல் குறிப்பு வருகிறது. 

"கங்குல் கனை சுடர் கால் சீயா முன்"

"வான் கண் விழியா வைகறை யாமத்து மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க" 

அப்படியென்றால் கங்குல் நேரம், கருக்கல் என்று சொல்வோமல்லவா அந்த அதிகாலை நேரம். சூரியன் உதிக்காத, வெண் மதி நீங்கி விட்ட இருள் நேரம். ஆக அந்த நேரத்தில் சூரியனும் உதிக்கவில்லை, நிலவும் வானில் காணப்படவில்லை. ஆகவே அந்த நாள் வளர் பிறை நாளாகவே இருக்கக்கூடும். ஏனெனில் தேய் பிறையில் பௌர்ணமி தொடங்கி அடுத்த 14 நாட்கள் காலையில் நிலவு தெரியும். இதனால் உரை ஆசிரியர்கள் இதை பூர்வ பட்சக் காலை என்று குறித்தனர். அதன் படி பார்த்தால். மே 7ம் தேதி இரவு - மே 8ம் தேதி திங்கள் கிழமை அதிகாலை, வளர்பிறையின் பதிமூன்றாம் நாளான திரயோதசி . ஆகவே இந்தக் குறிப்பும் சரியாகப் பொருந்தி வருகிறது அல்லவா. அடியார்க்கு நல்லார் இதை ஒரு நாள் நகர்த்தி அதாவது செவ்வாய் அதிகாலை, கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய தீய நாளில் அவர்கள் கிளம்பினர் என்று எழுதியிருக்கிறார். ஆனால் செவ்வாய் அதிகாலை பௌர்ணமி வந்துவிடுகிறது. அப்போது நிலவு அதிகாலையில் தெரியும் நாள் என்பதால், தீய நாள் குறிப்பு இருக்கவேண்டும் என்பதற்காக அவர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மே 8, 130 அதிகாலை வீட்டை விட்டுக் கிளம்பிய கோவலனும் கண்ணகியும் இலவந்திகைப் பள்ளிக்குச் செல்கின்றனர். அப்போது கோவலனிடம் கண்ணகி மதுரைக்குச் செல்ல எத்தனை நாட்கள் என்று கேட்க, அவன் 'ஆறு ஐங் காதம்' என்கிறான். அதாவது முப்பது காதம், கிட்டத்தட்ட 450 கிமீ. பூம்புகாரிலிருந்து கிளம்பினால் தஞ்சாவூர், புதுக்கோட்டை திருப்பத்தூர் வழியாக மதுரை செல்லும் வழி (தற்போதுபோல) இல்லாததால், அவர்கள் உறையூர் ராஜபாட்டை மூலம் அவ்வூரை அடைந்து அதன்பின் உறையூர்- மதுரை வழி மூலம் மதுரை வந்து சேருகிறார்கள். இது 450 கிமீயை ஒத்திருக்கிறது. 

இருவரும் இலவந்திகைப் பள்ளியை அடைந்து கவுந்தியடிகளோடு மதுரை நோக்கிப் புறப்படுகின்றனர். 

"காவதம் அல்லது கடவார் ஆகி, பல நாள் தங்கி செல் நாள் ஒரு நாள்"

அதாவது ஒரு நாளில் ஒரு காதம் கூடச் செல்லாமல், பல நாட்கள் பல இடங்களில் தங்கித் தங்கிச் சென்றார்களாம். அவர்கள் மதுரையை எப்போது அடைகிறார்கள். பார்ப்போம்.