Monday, 18 May 2020

சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன





தமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன என்று ஆராய்வோம்.

முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று நான் குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள்.  நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது, ஒரு சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்கள் அதைப் பற்றிப் பதிவுசெய்வது அகச்சான்றாகும். இந்த நிகழ்வு தொடர்பாக நமக்குக் கிடைத்த அகச்சான்றுகள் என்னென்ன?

இதைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் காலகட்டத்தைப் பற்றியும், இச்சம்பவம் நடந்த பின்னணி பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் களப்பிரர் தமிழகத்தை ஆண்ட போது, சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்தன. அவர்களுடைய ஆட்சி, வடக்கில் பல்லவ சிம்ம விஷ்ணுவாலும், தெற்கில் பாண்டியன் கடுங்கோனாலும் அகற்றப்பட்ட பிறகு சனாதன சமயங்கள் மறுமலர்ச்சி அடையத் துவங்கின. ஆனால், சிம்மவிஷ்ணுவின் குமாரரான மகேந்திர பல்லவர் (பொயு 600 -630) சமண சமயத்தைத் தழுவினார். ஆகவே புத்துயிர் அடைந்த சமணர்கள், சனாதனம் மீண்டும் தலையெடுக்கக்கூடாது என்ற கடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து சைவத்திற்குத் திரும்பிய நாவுக்கரசருக்குப் பெரும் துன்பம் விளைவித்தனர். 'கற்றுணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும்', 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை' போன்ற பாடல்கள் நாவுக்கரசருக்கு சமணர்கள் இழைத்த துன்பங்களுக்கான அகச்சான்றுகளாக விளங்குகின்றன. இப்படி அவருக்குத் துன்பம் தரப்போய், எதிர்பாராதவிதமாக மகேந்திர வர்மரே சைவத்திற்குத் திரும்பும்படி ஆகிவிட்டது சமணர்களுக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது.

அடுத்ததாக, பாண்டியர் பரம்பரையில் வந்த நெடுமாற பாண்டியன் (பொயு 640 - 670) சமணத்தைத் தழுவினான். ஆக, தமிழக அரசபரம்பரையில் கடைசிப் பிடியாக சமணர்களுக்கு இது இருந்தது.  அப்போது ஞானசம்பந்தரை, பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசி மதுரைக்குத் தருவித்தார். அப்படிச் செல்கின்றபோதே நாவுக்கரசர், 'பிள்ளாய்! அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை' என்று ஞானசம்பந்தருக்கு எச்சரிக்கை செய்தே அனுப்புகிறார். அவர்கள் கையால் பெரும் துன்பங்களை அனுபவித்தவர் அல்லவா.

சம்பந்தர் மதுரை வந்து சேர்ந்த பிறகு, அவரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் தீ வைத்தனர். இந்த நிகழ்வைப் பற்றி சம்பந்தரே இப்படிக் குறிப்பிடுகிறார்.

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

பாண்டியனை வெப்பு நோய் தாக்க, அதைத் தீர்க்குமாறு சம்பந்தரை வேண்டுகிறார் அரசி. இப்போது சமணர்கள் எங்களாலும் முடியும் என்று சொல்லி, அரசரது இடது பக்கத்தில் உள்ள வெப்பு நோயைத் தீர்க்க மயில்பீலியால் மந்திரம் செய்கிறார்கள். அது உதவவில்லை, எனவே 'மந்திரமாவது நீறு' என்ற பதிகத்தைப் பாடி பாண்டியனின் வலது பக்கத்திலும், பின்பு அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க உடல் முழுவதிலும் உள்ள வெப்பு நோயை சம்பந்தர் நீக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த நெடுமாறன் தாம் சைவநெறிக்கு மாறுவதாக உறுதியளிக்கிறான். இப்போது தங்கள் வசமிருந்த அரசு கைநழுவிப் போனதால் கோபமும் பொறாமையும் வந்து தாக்குகிறது சமணர்களுக்கு சம்பந்தரை வாதுக்கு அழைக்கிறார்கள். முதலில் அனல் வாதம் நடைபெறுகிறது. தனது 'தளரிள வளரொளி' என்ற பதிகத்தில் 'கொற்றவன் எதிரிடை எரியினில் இட' என்று சம்பந்தர் இந்த நிகழ்வைப் பதிவு செய்கிறார்.

அடுத்து ஏடு, ஆற்றின் போக்கை எதிர்த்துச் செல்லுமா என்ற புனல் வாதம் நடைபெறுகிறது. 'வாழ்க அந்தணர்' என்று தான் எழுதிய பதிகத்தில், அந்த ஏடு வெள்ளத்தை எதிரிட்டுச் செல்வதை

அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்ற தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே


என்றும் சம்பந்தர் பதிவு செய்திருக்கிறார். இப்படி இந்த வாது நிகழ்வுகளை அகச்சான்றாகப் பதிவு செய்திருக்கும் சம்பந்தர், கழுவேற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர் மட்டுமல்ல, சமகாலத்தவரான அப்பரும், பின்னால் திருத்தொண்டர் புராணம் பாடிய சுந்தரரும் கூட இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. சரி, எதிர்தரப்பான சமணர்களாவது இதைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் அவர்களும் இதைப் பற்றிப் பதிவுசெய்யவில்லை. இத்தனைக்கும், இந்த நிகழ்வு நடந்த பின்னர் பல நூற்றாண்டுகள் பாண்டி நாட்டிலும், தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் சமணர்கள் வாழ்ந்திருந்தனர். 'யாப்பருங்கலக்காரிகை' போன்ற பல நூல்களை எழுதியிருக்கின்றனர். எந்த ஒரு நூலிலும் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அண்மையில் இந்தக் கழுவேற்றம் பற்றிய நூல் ஒன்றை எழுதிய கோ. செங்குட்டுவன், சமண குருமார்களில் ஒருவரைப் பேட்டி கண்டபோது அவரும் இது தொடர்பான குறிப்புகள் ஏதும் சமணர்களிடம் இல்லை என்றே தெரிவித்திருக்கிறார். அப்படியானால், இந்தத் தொன்மம் எப்படி உருவானது ?

இந்த நிகழ்வைப் பற்றி முதலில் குறிப்பிடுபவர் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த, ராஜராஜனின் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி. 

அணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கி 
அமண் கணங்கழு வேற்றி 
என்று சம்பந்தரைப் புகழ்கிறார் அவர். ஆனால் இங்கும் அப்படிக் கழுவேறிய சமணர்களின் எண்ணிக்கை பற்றி அவர் ஏதும் தகவல் தரவில்லை.  அவரது காலத்திற்குப் பின் வந்த  சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணத்தில் இந்த நிகழ்வை விரிவாகவே தொகுத்து அளிக்கிறார். அதுவும் புனல் வாதத்தில் நாங்கள் தோற்றால், நாங்களே கழு ஏறுவோம் என்று சமணர்கள் பொறாமையின் காரணமாகச் சொன்னார்கள் என்று குறிக்கிறார் அவர்.

அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே ‘தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங் கழு ஏற்றுவான் இவ் வேந்தனே’ என்று சொன்னார்

அப்படித் தோற்ற பிறகு, 'எண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்' என்றும் குறிக்கிறார் சேக்கிழார்.

இங்கு எட்டாயிரம் என்பது மிகை, இடைப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு மாறுபாடுகள் அடைந்த தொன்மத்தின் விளைவே என்று சிலர் கூறுகிறார்கள்.  இந்த எண்ணாயிரவர் என்பது எட்டாயிரம் ஆட்களல்ல. மதுரையைச் சுற்றி எட்டு குன்றங்களில் வாழ்ந்த 'எண்ணாயிரம்' என்ற ஊரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

எப்படியிருந்தாலும் 'எட்டாயிரம் பேரைக் கழுவேற்றிய' ஒரு நிகழ்வு நடந்திருக்கச் சாத்தியமேயில்லை என்பதைத் தான் இந்த குறிப்புகள் உணர்த்துகின்றன. கழுவேற்றும் நிகழ்வு நடந்திருந்தாலும், அது வாதில் ஈடுபட்ட சில சமணர்களால், அவர்களின் சபதப்படியே நடந்திருக்கும் சாத்தியமே அதிகம் என்பதையும் இது தெளிவாக்குகிறது. இதை வைத்து சனாதன தர்மத்தின் மீதும் சைவத்தின் மீதும் அவதூறு காண்பிக்கவே இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறதே தவிர, பாதிக்கப்பட்ட தரப்பே மறுக்கும் இந்த நிகழ்வில் உண்மை இல்லை என்பதே நிதர்சனம்.














Wednesday, 8 April 2020

அனுமனின் பேராற்றல் - மருந்து மலைப் படலம்

இன்று வடநாட்டில் அனுமனின் ஜயந்தி உற்சவம். இந்நன்னாளில் அனுமனது பராக்கிரமத்தில் ஒன்றான சஞ்சீவி மலையைக் கொண்டுவந்தது பற்றி எழுதுவது பொருத்தமானது அல்லவா. 



(முதலில் ஒரு குறிப்பு. சஞ்சீவி மலை எங்கிருந்தது என்பது பற்றிப் பல தியரிகள் உண்டு. நான் கம்பனில் இருந்து, பெரியவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதியிருக்கிறேன். இது தவறு, சஞ்சீவி மலை என் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளித்தான் இருந்தது என்று சொல்பவர்கள் தயை கூர்ந்து கடந்து செல்லவும்.)

ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்த மருந்து மலைப் படலம் வருகிறது. இந்திரஜித்தால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டு வானரசேனைகள் அனைத்தும் வீழ்கின்றன. லக்ஷ்மணனும் அயர்ந்து வீழ்ந்துவிடுகிறான். அப்போது போர்க்களத்தில் இல்லாதவர்கள் ராமனும் விபீஷணனும். பின்னால் போர்க்களத்திற்கு வந்த ராமன்,  அனுமன் உட்பட அனைவருக்கும் நேர்ந்த கதியைப் பார்த்து திடுக்கிடுகிறான். மூர்ச்சையடைந்து வீழ்கிறான். இப்போது விபீஷணனும் அங்கே வந்து சேருகிறான். அவனுக்கும் அதிர்ச்சி. இது பிரம்மாஸ்திரத்தால் வந்த விளைவே என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. இதைச் சரிசெய்யும் வழி என்ன? யாராவது உயிருடனிருக்கிறார்களா என்று தேடும்போது அனுமனைக் காண்கிறான் விபீஷணன். அனுமனின் களைப்பைத் தெளிவித்த பின் இருவரும் ஆலோசிக்கின்றனர். சாம்பவன் எங்கே இருக்கிறார் என்று அனுமன் வினவ, இருவரும் அவரைத் தேடிச்செல்கின்றனர். வீரர்கள் அனைவரும் வீழ்ந்ததால் மனவருத்தமுற்று சோர்ந்து கிடந்த சாம்பவான் இருவரையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அனைவரும் உயிர்பெற சஞ்சீவனி மூலிகைகளைக் கொண்டுவருவதே சிறந்த வழி, அதைச் செய்து முடிக்கக்கூடியவன் அனுமன் ஒருவனே என்று கூறி, முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அந்தச் செய்தியை முரசறிவித்துக்கொண்டு உலகம் முழுதும் சுற்றிவந்ததால் தனக்கு அந்த மூலிகை கிடைக்கும் இடம் தெரியும் என்று சொல்லி, அந்த மூலிகை இருக்கும் இடமான மருந்து மலைக்கு வழியும் கூறுகிறார் சாம்பவான்.  முக்கியமாக விடிவதற்குள் அந்த மூலிகைகளை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார் அவர். 

எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல்லற மூர்த்தி தானும்,
வழுவல் இல் மறையும், உன்னால்வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி
.

உடனே அந்த மருந்தை விரைவில் எடுத்துவருவேன் எனக்கூறி அனுமன் பேருருவம் கொள்கிறான். 

ஓங்கினன் வான் நெடுமுகட்டை யுற்றனன் பொற்றோளிரண்டுந் திசையோ டொக்க
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே யென வளர்ந்தான் வேதம் போல்வன்

அப்படிப் பேருருவம் கொண்டு மிகுந்த வேகத்துடன் வான் வழியாகச் கிளம்பிச் செல்கிறான் ஆஞ்சநேயன். அதைக் கம்பன் வர்ணிக்கும்போது

கிழிந்தன, மாமழைக் குலங்கள், கீண்டது, நீண்டு அகல் வேலை; கிழக்கும் மேற்கும்;
பொழிந்தன,மீன் தொடர்ந்து எழுந்த, பொருப்பு இனமும், தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன வானவர் மானம், ஆகாயத்திசையினில் பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல் கீறின போய்த் திசைகள் எல்லாம்


அப்படி காற்றைக் கிழித்துக்கொண்டு அனுமன் செல்கையில் பேரொலி தோன்றியதாம். தற்போதைய Supersonic விமானங்களை விட விரைந்து சென்றிருப்பான் போலும். அப்படி இலங்கையிலிருந்து கிளம்பிச் சென்ற அனுமன் முதலில் இமய மலையைக் கடக்கிறான். அங்கே கயிலை மலையில் அமர்ந்திருந்த ஈசன் அனுமனை உமாதேவிக்குச் சுட்டிக்காட்டுகிறார். அதன் பிறகு ஹேமகூட மலையைத் தாண்டி, நிடத மலையை அடைகிறான். அதனையும் கடந்து மேரு மலையை அடைகிறான். இந்த மேரு மலை உலகத்திற்கு அச்சு போன்றது என்று கூறப்படுகிறது. அந்த மேரு மலையில்தான் நாவல் மரம் ஒன்று உள்ளது. அதை வைத்தே இப்பெருநிலம் ஜம்புத்வீபம் (நாவலாந்தீவு) என்று அழைக்கப் படுகிறது. அந்த நாவல் மரத்தைக் கண்டு வணங்கி, அதனையும் தாண்டிச் செல்கிறான் அனுமன். அடுத்து உத்தரகுரு எனும் இடத்தை அடைகிறான். அங்கு வந்தவுடன் விடிந்து விடுகிறது.

அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த அண்ணல்,
உத்தர குருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செற்றிய இருள் இன்று ஆக்கி விளங்கிய செயலை நோக்கி
வித்தகன், ‘விடிந்தது ‘என்னா ‘முடிந்தது என் வேகம் ‘என்றான்.


ஆகா, விடிவதற்குள் இந்த மூலிகையைச் சென்று சேர்க்க வேண்டியிருந்தது போக, இப்போது விடிந்துவிட்டதே. எனது வேகமும் முடிந்துவிட்டது என்று தளர்ச்சியுற்றான் அனுமன். ஆனால் கொஞ்சம் யோசித்த பிறகு அவனுக்கு ஒன்று புலப்படுகிறது. அனுமன் இலங்கையிலிருந்து கிளம்பிச்சென்றது மாலை முடியும் நேரத்தில். அவன் வடதிசை நோக்கிச் செல்கிறான். ஆனால் இப்போது அவனது இடப்பக்கம், அதாவது மேற்குத் திசையில் சூரியன் தோன்றுகிறது. அதெப்படி மேற்கில் சூரியன் உதிக்கும் என்று சிந்தித்தான். தான் வடபகுதியை, அதாவது வடதுருவத்தைத்தாண்டி வந்துவிட்டதால், பூமிக்கு அந்தப்பக்கமாக வந்துவிட்டோம். அங்கே இப்போது பகல் அல்லவா, அதனால்தான் சூரியன் இடப்பக்கம் தோன்றுகிறான் என்று புரிகிறது அவனுக்கு. உடனடியாக உற்சாமடைந்து நீலமலையைக் கடந்து மேலே சென்று மருந்து மலையைக் காண்கிறான். அங்கே உள்ள தெய்வங்களை வேண்டி, மருந்து மலையையே அலாக்காகத் தூக்கி வந்து விடுகிறான். இதிலிருந்து பார்க்கும்போது சஞ்சீவிமலை பூமிக்கு மறு பக்கத்தில், அதாவது அமெரிக்கக் கண்டத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதிலும் மலைகள் பல நிறைந்திருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்தே அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்தான் என்று கூறுபவர்கள் உண்டு.

அப்படி மருந்து மலையை வேகமாக இலங்கைக்கு கொண்டுவருகிறான் அனுமன். இப்போது பூமிக்கு இந்தப்பக்கம் இன்னும் இரவாகவே இருக்கிறது. வந்து, வானரங்களையும், லக்ஷ்மணன் முதலான அனைவரையும் உயிர்ப்பிக்கிறான். இராமனுக்கு பெரும் சந்தோஷம். அனுமனைப் புகழ்ந்து இராமன் கூறுவது.

அழியுங்கால் தரும் உதவி ஐயனே!
மொழியுங்கால் தரும் உயிரின் முற்றுமோ?
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நன் மறையும் காத்தனை


என்னே அனுமனின் பெருமை !!

Saturday, 1 February 2020

க்ஷத்திரியப் பிராம்மணர்கள்

நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran  அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும்



பண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது. 

மகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்தருகிறார். இப்படிப் பல உதாரணங்கள் உண்டு. 

சரித்திர காலத்திற்கு வந்தால், மௌரியர்களுக்கு அடுத்து வடநாட்டில் ஆட்சி புரிந்த புஷ்யமித்திர சுங்கன் ஒரு க்ஷத்திரியப் பிராமணரே. பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அவர் தோற்றுவித்த சுங்க வம்சம் (பொயுமு 1ம் நூற்றாண்டு)  பாரதத்தை சிறிது காலம் ஆண்டது.  

அதே போலத் தென்னாட்டில் பல்லவர் ஆட்சியின் போது, காஞ்சியில் கல்வி கற்க மயூரசன்மன் என்ற அந்தணன் வந்தான். அங்கே ஒரு பல்லவப் போர்வீரன் அவனை அவமானப்படுத்தியதால் வெகுண்டெழுந்த மயூரசர்மன், ஒரு படையை ஶ்ரீசைலத்தில் திரட்டி பல்லவ அரசனான ஸ்கந்தவர்மன் மீது போர் தொடுத்தான். அவனை முறியடிக்க இயலாத பல்லவன், மயூரசர்மனை ஒரு அரசனாக அங்கீகரித்ததை அடுத்து, பனவாசியில் கதம்ப வம்சத்தை ஸ்தாபித்து அரசாண்டான் மயூரசர்மன். (பொயு 4ம் நூற்றாண்டு).  அதே பல்லவர் ஆட்சியில் சோழ நாட்டில் மாமாத்திரர் குலத்தில் பிறந்த பரஞ்சோதி, நரசிம்ம பல்லவரின் படைத்தளபதியாகி, வாதாபி சென்று புலகேசியைத் தோற்கடித்துத் திரும்பியது நமக்குத் தெரிந்தது. இந்த மாமாத்திரர் குலத்தைப் பற்றிக் காஞ்சிப் பெரியவர் இப்படிச் சொல்கிறார். 

பரஞ்ஜோதி ப்ராம்மண ஜாதியிலேயே வைதிகத்தை விட்டுவிட்டு லௌகிகப் பிரவிருத்திகளில் (தொழில்களில்) போனதால் தனியாகப் பிரிக்கப்பட்ட ‘மஹாமாத்ரர்’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாமாத்திரர்’ என்று பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. ‘மாமாத்திரர்’ மாதிரியே ‘அமாத்தியர்’ என்று ஒரு ஜாதி. ஸம்ஸ்க்ருதத்தில் ‘அமாத்யன்’ என்றால் மந்திரி. ‘அமாத்யன்’ தான் தமிழில் ‘அமைச்சன்’ ஆயிற்று.  இப்போது மந்திரி என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தை கூடாது என்று, ‘அமைச்சர்’ தமிழ் வார்த்தை என்று நினைத்து அப்படிப் போட்டுக் கொள்கிறார்கள்! மாணிக்க வாசக ஸ்வாமிகள் அமாத்ய ப்ராமணர். பாண்டிய ராஜாவுக்கு அமாத்யராக (மந்திரியாக) இருந்து ‘தென்னவன் பிரமராயன்’ என்று பட்டம் வாங்கியவர். பிராம்மணர் என்பதால் ‘பிரம’. ராஜாவின் பிரதம அதிகாரி என்பதால் ‘ராயன்’, சோழ ராஜாக்களும் பிராமண மந்திரிகளை வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிரமராயப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். வைதிக தொழிலை விட்டுவிட்டு ராஜாங்கத்தில் ‘ஸிவில் அட்மினிஸ்ட்ரேஷன்’ செய்யும் ‘எக்ஸிக்யூடிவ் ஸைடு’க்குப் போன பிராமணர்களை அமாத்தியர் என்று பிர்த்து வைத்தது. பிராமணர்களிலேயே இன்னும் ஒரு படி தள்ளி மிலிடரி ஸர்வீஸுக்குப் போனவர்களை மாமாத்திரர் என்று பிரிவினை பண்ணிற்று. அந்த ஜாதிக்காரர்கள் வைத்தியத் தொழிலிலும் நிறையப் போயிருக்கிறார்கள். ஸேனையில் சேர்ந்து உயிரை எடுப்பது, வைத்தியராக உயிரைக் கொடுப்பது ஆகிய இரண்டு பணிகளும் விநோதமாக அந்த ஜாதியாருக்கு இருக்கிறது.

பரஞ்சோதியைத் தவிர பெரியவர் சொன்ன மற்ற உதாரணங்களைப் பார்ப்போம். இடைக்காலப் பாண்டியர்களில் ஜடில பராந்தக நெடுஞ்சடையன் (பொயு 8ம் நூற்றாண்டு) ஆட்சியில் இந்த க்ஷத்திரியப் பிராமணர்கள் பெரும்பங்கு வகித்தனர். யானை மலைக் கோவிலைக் கட்டிய மாறன் காரி, மாறன் எயினன், திருப்பரங்குன்றம் கோவிலை அமைத்த சாத்தன் கணபதி ஆகியோர் இவனுடைய தளபதிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்தனர். இவர்கள் திருநெல்வேலியை அடுத்த உக்கிரன் கோட்டை என்னும் கரவந்த புரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதில் சாத்தன் கணபதி வைத்தியராகவும் இருந்திருக்கிறார். இக்காலத்தில்தான் அரசன் என்று பொருளுடைய அரையன், ராயன்,  என்னும் பின்னெட்டுகளை அரசு உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் பிராமணர்களாக இருந்தால், பிரம்மராயன், பிரும்மமாராயன், பிரும்மாதிராசன் போன்ற பெயர்கள் ஒட்டிக்கொள்ளும். 

சோழ வரலாற்றில் முக்கியமான நிகழ்வான ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைக் குறிப்பிடும் உடையார்குடிக் கல்வெட்டு 'ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன்' என்று குறிக்கிறது. பஞ்சவன் என்பது பாண்டியர்களைக் குறிக்கும் (தாயாதிகளான பாண்டியர்கள் ஐந்து இடங்களிலிருந்து ஆட்சி செய்யும் வழக்கமுள்ளவர்கள்). தென்னவன் பிரமாதி ராஜன், பஞ்சவன் பிரமாதிராஜன் ஆகியவை பாண்டிய நாட்டு அந்தண உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் பெயர்களாகும். கல்வெட்டில் உள்ள சோமன் என்பவனும் பஞ்சவன் பிரமாதிராஜனாகவே இருக்கவேண்டும் என்று வரலாற்றாய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். வீரபாண்டியன் தலையைத் துண்டித்த அடாத செயலுக்குப் பழிவாங்கவே இவர்கள் இந்தச் செயலைச் செய்திருக்கவேண்டும். 

சோழ அதிகாரிகளைப் பார்த்தால், சுந்தர சோழனின் அமைச்சராக இருந்த அநிருத்தப் பிரம்மராயர், ராஜராஜனின் தளபதியாக இருந்து தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுச் சுவர் எடுப்பித்த அமன்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயர். அவர் மகனும் ராஜேந்திர சோழனின் படைத்தளபதியாக இருந்தவனுமான மாறன் அருள்மொழியான உத்தமச்சோழ பிரம்மராயன் ஆகியோர் க்ஷத்திரியப் பிராமணர்களே. 

இன்னும் பல உதாரணங்களைச் சொல்லலாம். முடியாட்சிக் காலத்தில் க்ஷத்திரியப் பிராமணர்கள் முக்கியமான இடத்தை வகித்தனர் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது. 


















Wednesday, 23 October 2019

தமிழர்களின் வானியல்



இன்று நண்பரொருவர் பகிர்ந்த, மதுரையில் வைகை நதியில் புதுப்புனல் வரும் படத்தை ட்விட்டரில் போட்டு அதனுடன் சங்க இலக்கியமான பரிபாடலின் ஒரு சில வரிகளையும் கொடுத்திருந்தேன். என்னதான் பாரதத்திலிருந்து தமிழகத்தையும் தமிழர்களையும் தனித்துக்காட்ட ஒரு கும்பல் கூச்சல் போட்டுக் குதித்தாலும், பாரதப் பண்பாட்டின், கலாச்சாரத்தின் ஒரு பகுதியே தமிழகம் என்பதை நிறுவும் பல சங்க இலக்கியப் பாடல்களுள் இதுவும் ஒன்று என்பதால்  கொஞ்சம் விரிவாகவே அதைப் பார்க்கலாம்.

முதலில் இந்தப் பாடல். பரிபாடல்(கள்) வரிசையில் பதினொன்றாவது. பரிபாடலில் பாட்டுடைப் பொருளாக முருகன், திருமால், வைகை ஆகியவற்றை வைத்துப் பல புலவர்கள் பாடியது நமக்குத் தெரியும். அந்த வகையில் இது வையையைப் போற்றும் பாடல். பாடியவர் நல்லந்துவனார்.

விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப, 
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல் 
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன் 
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை 
மதியம் மறைய, வரு நாளில்  வாய்ந்த 

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி 
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் 
எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால் 
புரை கெழு சையம் பொழி மழை தாழ, 
நெரிதரூஉம் வையைப் புனல். 

இந்தப் பாடலில் இந்திய வானியல், வானிலை இயல், சோதிடத்தின் சில கூறுகள் என அனைத்தும் கலந்துவருவதைக் காணலாம். 

விரிகதிர் மதியம், அதாவது நிலவு ஆகாயம் முழுவதும் வியாபித்திருக்கிற நாளில் - பௌர்ணமியில்
எரி - கார்த்திகை நட்சத்திரம், அந்த நட்சத்திரத்தை தன்னுள்ளே கொண்ட இடபவீதி, சடை - சிவபெருமானைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரமான திருவாதிரையை தன்னுள்ளே கொண்ட மிதுன வீதி, வேழம் - யானைக்கு உரிய நாளான பரணியை தன்னுள்ளே கொண்ட மேடவீதி  ஆகிய மூன்று வீதிகளைக் கொண்டு
அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திரங்கள் வீதம்  இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் பன்னிரண்டு ராசி மண்டலங்களையும் கொண்ட வானில் 
வெள்ளி ஏற்றியல் - தனக்குரிய இடப ராசியை அடைய, வருடை - மேடம், மேஷ ராசியை படிமகனான செவ்வாய் அடைய, புந்தி - புதன் மிதுன ராசியில் நிற்க, புலர் விடியல் - சூரியன் தன்னுடைய ராசியான சிம்மத்தின் மேலுள்ள கடகத்தில் இருக்க, அந்தணன் - வியாழன் பங்கு - சனியின் துணை இல்லங்களான மகர, கும்பத்தின் அப்பால் உள்ள மீனத்தை அடைய, யமனைப் போன்ற சனி மகரத்தில் இருக்க பாம்புக்கிரகங்களில் ஒன்றான ராகு நிலைவை மறைக்க - அதாவது அன்று சந்திரக் கிரகணம் 
அப்படிப்பட்ட ஒரு நாளில், பொதியில் முனிவன் - அகத்தியனுக்கு உரிய நட்சத்திரமான அகத்திய நட்சத்திரம் (Canopus) மிதுன ராசியை அடைந்தது. அன்று வேனில் காலம் தந்த வெம்மை அகல சைய மலையில் பருவ மழை பொழிய ஆரம்பித்தது. அந்த மழையின் காரணமாக வையையில் புதுப்புனல் வந்தது. 

ஒரே பாடலில் எவ்வளவு செய்திகளைத் தந்திருக்கிறார் பாருங்கள். முதலில் பால்வீதி என்று இன்று அழைக்கப்படும் நமது வான்வெளியை மூன்று தெருக்களாகச் சமைத்து அதில் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்டு பன்னிரண்டு ராசி மண்டலங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து கோள்களின் நிலையை விளக்குகிறார் நல்லந்துவனார். 

கோள்களின் தலைவனான சூரியன் கடக ராசியில் இருக்கிறான். இதைக்கொண்டு அது ஆடி மாதம் என்று தெரிந்து கொள்ளலாம். அதுனுடனே பயணிக்கும் புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் இடபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும் இருக்கிறார்கள். ஆக, சூரியனைத் தவிர மற்ற எல்லாக் கிரகங்களும் அதன் சொந்த வீடுகளிலேயே இருக்கின்றன (அதனால்தானோ என்னவோ புலவர் ராசிகளுக்கு இருக்கை என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்). சந்திரன் கடகத்திற்கு ஏழாம் வீடான மகரத்தில் இருக்கிறார். அதனால் தான் அன்று பௌர்ணமி. போதாக்குறைக்கு ராகு அதனை மறைப்பதால் அன்று சந்திரக் கிரகணம். தோராயமாக அன்று உத்திராட நட்சத்திரமாக இருக்கக்கூடும். 

தவிர அகத்திய நட்சத்திரம் மிதுனத்தில், அதாவது சூரிய உதயத்திற்குச் சற்று முன்னால் தென் திசையில் உதிக்கிறது. இன்றும் ஆடி மாதத்தன்று அகத்திய நட்சத்திரத்தைத் தென் திசையில் காணலாம். அப்படிப்பட்ட நாளில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியிருக்கிறது. அதனால் வையையிலும் புனல் வந்திருக்கிறது.  ஒரு சிலர் இந்தக் கிரக நிலைகளை ஆராய்ந்து, இந்த நாள் பொயுமு 161ம் ஆண்டு வந்திருக்கக் கூடுமென்று  கணித்திருக்கின்றனர். தொல் வானியலில் அதி நவீன மென்பொருட்கள் வந்திருக்கிற இந்தக் கால கட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கணக்கீடு  சரியா என்று தெரிவிக்கலாம். அது பரிபாடலின் காலத்தை அறியவும் உதவும். 

மேற்குறிப்பிட்ட கூறுகள் எல்லாமே நமது பாரதத்தின் வானியலிலும், சோதிட சாஸ்திரத்திலும் காணப்படும் கூறுகளாகும். எனவே தமிழர் மற்ற பகுதிகளைப் போன்றே ஒரு பொதுவான வானியலைப் பின்பற்றியே வந்துள்ளனர் என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா என்ன? 











Sunday, 11 August 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3



குஸ்ரூ கான் டெல்லி சென்றதும் நடந்தவை, கிட்டத்தட்ட மாலிக்கபூர் டெல்லி சென்றதும் நடந்ததைப் போலவே, ஒரு ஆக்‌ஷன் ரீப்ளேயாக, இருந்தது. தனது எஜமானனான முபாரக்கை தந்திரமாக வீழ்த்திவிட்டு தான் மன்னனாக முடிசூட்டிக்கொண்டான் குஸ்ரூ கான். ஆனால் இது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. காஸி மாலிக் என்பவன் குஸ்ரூவை வீழ்த்திவிட்டு தானே சுல்தான் என்று பிரகடனம் செய்துகொண்டான். கியாசுதீன் துக்ளக் என்ற பெயருடன் டெல்லியில் துக்ளக் வம்சத்தை ஸ்தபித்தான். 

தொடர்ந்த குழப்பங்களால் சீர்கெட்டிருந்த டெல்லி நிர்வாகத்தைச் சீரமைக்கத்தொடங்கிய கியாசுதீன், தன் மகனான உலூக் கானை அடுத்த வாரிசாக அறிவித்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் 'பிரசித்தி பெற்ற' முகமது பின் துக்ளக். வாரிசாக நியமிக்கப்பட்ட உலூக்கானின் பார்வை முதலில் தக்காணத்தின்பால் திரும்பியது. காகதீயர்கள் போர்க்கொடி தூக்கியதால் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்த உலூக்கான் முதலில் தோல்வியையே சந்தித்தான். தேவகிரிக்குப் பின்வாங்கி, பிறகு மீண்டும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாரங்கல்லின் மீது படையெடுத்து, காகதீயர்களைத் தோற்கடித்தான். 'மாபாரின்' செல்வங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த உலூக்கான், அந்த செல்வங்களைக் கொள்ளையடிக்க மட்டும் எண்ணாமல், துக்ளக்கின் ஆட்சியை மதுரைவரை நீட்டிக்க ஆசை கொண்டான். எனவே தமிழகத்தின் மீது தனது தாக்குதலைத் தொடங்கினான். வடபகுதியில் அவனை எதிர்க்க வலுவான ஆட்சியாளர்கள் இல்லாததால், கண்ணனூர்க் கொப்பம் வரை உலூக்கானால் எளிதாக முன்னேற முடிந்தது. 

பொயு 1323ம்  ஆண்டு, பங்குனித் திருவிழா ஶ்ரீரங்கத்தில் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.  பங்குனி எட்டாம் திருநாள் உற்சவத்தில் நம்பெருமான் கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளினார். அருகிலுள்ள சமயபுரம் வரை உலூக்கானின் படைகள் வந்துவிட்டதை எண்ணி மனம் கலங்கினர் ஆலய நிர்வாகிகள். திருவிழாவைத் தொடர்வதா, நிறுத்துவதா என்று பெருமாளிடம் உத்தரவு கேட்கப்பட்டது. தொடர்ந்து நடத்துமாறு உத்தரவும் வந்தது.  விழா நடப்பதை அறிந்த உலூக்கானின் படைகள் ஆற்றைக் கடந்து விரைந்து வந்தன. காரியம் கைமீறிவிட்டதை அறிந்த பட்டர்கள், பிள்ளை லோகாச்சாரியாரிடம் நம்பெருமான் விக்ரகத்தை ஒரு பல்லக்கில் ஏற்றி ஒப்படைத்து தெற்கு நோக்கி அனுப்பிவைத்தனர். விக்ரகத்தைக் காணாததால் ஆத்திரமடைந்த டெல்லிப் படைகள் திருவிழாவில் கூடியிருந்தோரை, ஆண், பெண் சிறுவர்கள் அனைவரையும் கொன்று குவித்தனர். ஶ்ரீரங்கம் நகரின் மீதும் படையெடுத்து கோவிலைத் தாக்கியழித்தனர். நிராயுதபாணிகளான பலரின் தலை வெட்டப்பட்டு குருதி ஆறு ஓடியது. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர். 'பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்' என்று இந்நிகழ்ச்சி குருபரம்பரைச் சரிதத்தில் குறிப்பிடப்படுகிறது. தெற்கு நோக்கிப் பயணித்த நம்பெருமான், கேரளா வழியாக மேல்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டதும்,  பின் குமார கம்பண்ணர் மதுரையை மீட்டபின் ஶ்ரீரங்கம் எழுந்தருளியதும் 'திருவரங்கன் உலா' என்ற கதையில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஶ்ரீரங்கத்தைத் தாக்கியழித்த உலூக்கான் அடுத்து தனது இலக்கான மதுரையை நோக்கித் தன் படைகளைச் செலுத்தினான். அங்கே பராக்கிரம பாண்டியரின் ஆட்சி நடந்துகொண்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். டெல்லிப் படைகள் மீண்டும் வருவதைக் கண்ட பராக்கிரம பாண்டியன் காளையார் கோவில் நோக்கிப் பின்வாங்கினான். ஶ்ரீரங்கம் கோவிலுக்கு நேர்ந்த கதையை அறிந்த மதுரை ஸ்தானீகர்கள் மதுரைக் கோவிலைக் காக்க முனைந்தனர். உற்சவ மூர்த்திகளை சிலரிடம் கொடுத்து தென்பாண்டி நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். சுவாமி சன்னதியின் விமானத்தில் மீனாட்சி அம்மையை அஷ்டபந்தனம் செய்து மறைத்து வைத்தனர். சன்னதியின் வாயிலை சுவர் எழுப்பி மூடிவிட்டு அதன் முன் வேறொரு லிங்கத்தை வைத்தனர். மதுரை நகருக்குள் புகுந்த உலூக்கானின் படைகள் பேரழிவை நிகழ்த்தின. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கோவிலுக்கும் பெருத்த சேதம் நிகழ்ந்தது. சன்னதியின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கமும் உடைக்கப்பட்டது. 



                 (உலூக்கானின் படைகளால் சிதைக்கப்பட்ட லிங்கத்திருமேனி)


நகருக்கு நடந்த அழிவைக் கேள்விப்பட்ட பராக்கிரம பாண்டியர், தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு உலூக்கானுடன் மோதினார். ஆனால் அவருக்கு முன்பு போல் வெற்றி கிட்டவில்லை. டெல்லி திரும்பும் போது உலூக்கானால்  சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டு போகப்பட்ட பராக்கிரம பாண்டியர் வழியிலேயே உயிரிழந்தார். அவரோடு மதுரைப் பாண்டியர் வம்சம் முடிவுக்கு வந்தது. மதுரையை வெற்றி கண்ட உலூக்கான் 'மாபார்' என்ற பெயரோடு அதை துக்ளக் ஆட்சியின் ஒரு மாகாணமாக அறிவித்தான். தன் பிரதிநிதியாக ஜலாலுதீன் ஆசான் கான் என்பவனையும் நியமித்து டெல்லி திரும்பினான். அங்கே முகமது பின் துக்ளக் என்ற பெயரோடு முடிசூடிக்கொண்டான்.  பின்னால் ஆசான் கான் பொயு 1335ல் மதுரையை தனி சுல்தானகமாக அறிவித்ததும், அந்த ஆட்சி சுமார் 43 ஆண்டுகள் நடந்ததும், பின்னர் குமார கம்பண்ணர் மதுரையின் மீது படையெடுத்து அந்த சுல்தானகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததும் தனிக்கதை. 

எனவே, நடந்த மூன்று படையெடுப்புகளில் தமிழகத்தில் பேரழிவை நிகழ்த்தியதும், சுமார் 43 ஆண்டுகள் தமிழகமும் தமிழர்களும் பெரும் அவதிக்குள்ளாவதற்குக் காரணமாக இருந்ததும் உலூக்கான் நடத்திய இந்த மூன்றாவது படையெடுப்பே ஆகும். குமார கம்பண்ணர் மட்டும் தமிழகத்தை மீட்டிராவிடில், இன்று வடநாடுகளின் பல பகுதிகளைப் போலவே தமிழகமும் தன்னுடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஏன் மொழியையும் கூட இழந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 









Sunday, 28 July 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 2



சென்ற பகுதியில் மாலிக்கபூரின் படையெடுப்பைப் பற்றிப் பார்த்தோமல்லவா. அந்தப் படையெடுப்பின்  விவரத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, வசாப், பார்னி போன்றவர்கள் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பலர் சொல்வது போல், ஶ்ரீரங்கத்தில் மாலிக்கபூர் நிகழ்த்திய சேதங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. சமயபுரம் வரை வந்த மாலிக்கபூர் ஶ்ரீரங்கத்தை விட்டு வைத்திருக்க முடியாது என்றாலும், "மற்ற கோவில்களையும் கொள்ளையடித்தான்" என்று அமீர் குஸ்ரூ ஒரே வரியில் முடிப்பதால், கோவிலில் பெரும் கொள்ளை நடந்திருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளலாம். இதே போலத்தான் மதுரையிலும். செல்வங்கள் கொள்ளை போயினவே தவிர கோவிலுக்கு அதிகம் சேதமில்லை என்றே நாம் கருதலாம். மாலிக்கபூர் சிதம்பரம் கோவிலைச் சேதப்படுத்திய விவரங்கள் மட்டுமே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவன் ராமேஸ்வரம் வரை சென்றான் என்பதற்குக் கூட தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் மாலிக்கபூரின் படையெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாண்டியப் பேரரசை வலுவிழக்க வைத்துவிட்டது.

மாலிக்கபூர் அப்பால் சென்றவுடன் வீரபாண்டியன் மீண்டும் மதுரையைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி செய்யத்தொடங்கினான். ஆனால், சேரமான் ரவிவர்மன் குலசேகரன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து அவனைத் தோற்கடித்தது மட்டுமல்லாமல், காஞ்சி நகர் வரை தனது படையெடுப்பை மேற்கொண்டு நடுவிலுள்ள பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றினான். பிற்பாடு, பாண்டிய தாயாதி அரசர்கள் பெரும்பாடு பட்டு மதுரையை அவனிடமிருந்து மீட்டனர். அவர்கள் ஒருவனான பராக்கிரம பாண்டியன் பொயு 1315லிருந்து மதுரையை ஆளத்தொடங்கினான்.

ஹொய்சாளர்களின் நிலை இதற்கு எவ்வளவோ மேம்பட்டதாக இருந்தது. நாட்டைத் துரிதமாக புனர்நிர்மாணம் செய்ததாக வீர வல்லாளன் அவனுடைய கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறான். துவாரசமுத்திரத்தை மட்டுமல்லாமல், நாட்டின் மேற்கெல்லையில் ஹம்பி நகர் வரை அவன் தன்னுடைய அரண்களை வலுப்படுத்தினான். அது மட்டுமல்லாமல், தலைநகரை விட்டு மேற்கு எல்லையில் தன்னுடைய முகாமை அமைத்துக்கொண்டான்.

இரண்டாம் படையெடுப்பு

தென்னகத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது வடக்கிலும் பெரும் குழப்பம் நிலவியது. பொயு 1311ம் ஆண்டின் இறுதியில் மாலிக்கபூர் டெல்லியைச் சென்று அடைந்தான். அதன்பின் அலாவுதீன் கில்ஜியை தன் கைப்பொம்மையாக ஆட்டி வைத்து, அவனுடைய மகன்களைக் குருடாக்கியும் கொன்றும் பல கொடுமைகள் செய்தான். அலாவுதீனையும் 1315ல் மாலிக்கபூர் கொலைசெய்து விட்டு, அரசைக் கைப்பற்றிக்கொண்டான். ஆனால், இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அலாவுதீனின் மகன்களில் ஒருவனான முபாரக் கான், கபூரைக் கொன்று ஆட்சியைப் பிடித்தான். எப்படி அலாவுதீனுக்கு மாலிக்கபூரோ, அப்படி முபாரக் கானின் அடிமையாக இருந்தவன் குஸ்ரூ கான். இருவருமாகச் சேர்ந்து தக்காணத்தின் மீது படையெடுத்தனர்.

தேவகிரியை வென்ற பிறகு, அவர்களின் கவனம் காகதீயப் பேரரசின்மீது திரும்பியது. டெல்லிக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை காகதீய அரசன் பிரதாபருத்திரன் நிறுத்தியிருந்தான். அதனால், குஸ்ரூ கான் வாரங்கல்லின் மேல் படையெடுத்து அதனை வென்றான். இதற்கிடையில் முபாரக் கான் டெல்லி நோக்கித் திரும்பவே, குஸ்ரூ கான் மீதியுள்ள செல்வங்களைக் கொள்ளையடிக்கும் ஆசையில் பொயு 1318ல் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்தான்.

குஸ்ரூ கானின் படை அதிக எதிர்ப்பைச் சந்திக்காமல் மதுரை நோக்கி முன்னேறியது. டெல்லிப் படைகள் வருவதை அறிந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு கானப்பேர் (காளையார்கோவில்) சென்று ஒளிந்து கொண்டான். எதிர்ப்பேதும் இல்லாமல் மதுரையைக் கைப்பற்றிய குஸ்ரூ கான் அங்கே சில காலம் தங்கியிருந்தான். அங்கேயிருந்து கொண்டு டெல்லியைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்ட ஆரம்பித்தான்.

அப்போது மதுரையில் கடும் மழைக்காலம் தொடங்கியது. (உண்மைதான் நம்புங்கள்).  தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருந்த பராக்கிரம பாண்டியன் தன் படைகளோடு வந்து குஸ்ரூ கானை எதிர்த்தான். எதிர்பாராத இந்தத் தாக்குதலாலும், கவனம் டெல்லியில் இருந்ததாலும் குஸ்ரூ கான் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு டெல்லி திரும்பினான். மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வந்தது.  இந்தப் படையெடுப்பைப் பொருத்தவரை, தமிழகம் தனது செல்வங்களை மீண்டும் ஒருமுறை இழந்தாலும் மற்றபடி சேதங்கள் குறைவாகவே இருந்ததது.


                                                                                                                             அடுத்து





தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1

(சுருக்கமான) முன்னுரை

தமிழகத்தின் மீது நடைபெற்ற டெல்லி சுல்தான்களின் படையெடுப்பைப் பற்றி பல்வேறு விதமான கதைகள் / தகவல்கள் உலவுகின்றன. நன்கு கற்றறிந்த நண்பர்களே கூட இவற்றைப் பற்றி எழுதும்போது பல தவறுகளைச் செய்வதைக் காண முடிந்தது. குறிப்பாக 'எல்லாக் கேசையும்' மாலிக்கபூர் மீதே எழுதிவிடுகிறார்கள். கொஞ்ச நாள் முன்பு நான் படித்த கட்டுரை ஒன்றில் வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்த நண்பர் ஒருவரே பல பிழைகளைச் செய்திருந்தார். இதற்கான காரணமாக நான் கருதுவது, ஏதாவது ஒரு ஆதாரக் கட்டுரையை எடுத்துக்கொண்டு கால வித்தியாசங்களைச் சரிபார்க்காமல், மற்ற தரவுகளை ஒப்புநோக்காமல் எழுதுவதே ஆகும்.  முடிந்த மட்டிலும் அதற்கான ஆய்வைச் செய்து, இந்த விஷயத்தில்  ஓரளவுக்கு தெளிவான பார்வையை அளிக்க முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தப் படையெடுப்புகளைப் பற்றி நான் இந்த ப்ளாக்கில் எழுதிய 'சித்திரைத் திருவிழா' கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தத் தகவல்களை கொஞ்சம் விரிவாக இப்போது பார்க்கலாம்.



முதல் படையெடுப்பு

தமிழ்நாட்டின் மீது பொயு 14ம் நூற்றாண்டில் மும்முறை டெல்லி சுல்தான்களின் படைகள் தாக்குதல் நிகழ்த்தின. இதில் மூன்றாவது தாக்குதல்தான் தமிழகத்தை இருளில் அமிழ்த்தியது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

அலாவுதீன் கில்ஜி டெல்லியில் ஆட்சி செய்துகொண்டிருந்த போது, அவனது படைத்தலைவனாக இருந்தவன் மாலிக்கபூர்.  மாபார் என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்ட மதுரையின் செல்வ வளத்தைப் பற்றி மார்க்கோ போலோவும், மற்ற தூதர்களும் கில்ஜியிடம் கதை கதையாகச் சொல்லியிருந்தார்கள். பாண்டிய நாட்டில் இருந்த யானைகள் எப்படி வலுவானதாகவும் போர்த்திறன் கொண்டதாகவும் இருந்தன என்பதையும் பற்றி அவனுக்குச் சொன்னார்கள். தவிர, இஸ்லாத்தை தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் பரப்ப வேண்டும் என்ற வேட்கையும் கில்ஜிக்கு இருந்தது. ஆகவே ஏற்கனவே வாரங்கல் வரை வந்து வெற்றியடைந்திருந்த மாலிக்கபூரை தமிழகத்தில் வந்து கொள்ளையடிப்பதற்காக கில்ஜி அனுப்பிவைக்க முனைந்தான்.

பொயு 1310ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படை டெல்லியிலிருந்து கிளம்பியது. இரு மாதங்கள் கழித்து, தக்காணத்திலுள்ள தேவகிரிக்கு வந்து முகாமிட்டது இந்தப் படை. அங்கு சில நாள் தங்கிவிட்டு, கோதாவரியையும் பீமா நதியையும் கடந்து பண்டரிபுரத்தை அடைந்தது அந்தப் படை. அங்கு தங்கி தென்னகத்தின் நிலையை ஆய்வு செய்தான் மாலிக்கபூர். அப்போது துவாரசமுத்திரத்தை (தற்போதைய ஹலேபீடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்தவன் ஹொய்சாள மன்னன் வீர வல்லாளன். தமிழகத்தின் வடபகுதி வரை அவனது ஆட்சி பரவியிருந்தது. தமிழகத்தின் தென்பகுதியை பாண்டியர்கள் ஆண்டுவந்தனர். பாண்டிய சகோதரர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் சகோதரர்களுக்கு இடையே வாரிசுரிமைப் போர் ஏற்பட்டு, இளையவனான வீர பாண்டியன், மூத்தவன் சுந்தர பாண்டியனைத் துரத்திவிட்டு மதுரை ஆட்சியைக் கைப்பற்றி இருந்தான். இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைத்த வீர வல்லாளன், தன் படையோடு கிளம்பி பாண்டிய நாட்டின் மீது போர்தொடுக்க வந்துகொண்டிருந்தான்.

இந்த நிலையில், தன் நாட்டின் வட எல்லையில் மாலிக்கபூர் பெரும் படையோடு வந்து தங்கியிருப்பதை அறிந்த வல்லாளன், அவசரமாக பாண்டிநாட்டுப் படையெடுப்பைக் கைவிட்டு தலைநகர் திரும்ப நேரிட்டது. இதற்குள் மாலிக்கபூர் துவாரசமுத்திரத்தை நெருங்கி விட்டான். கில்ஜியின் வலுவான படைகளைக் கண்ட வல்லாளன், சமாதானத்தைக் கோரத் தீர்மானித்தான். இதற்கிடையில், அடுத்து தனக்குத்தான் ஆபத்து வரும் என்று கணித்த வீர பாண்டியன், வல்லாளனோடு இருந்த பகையை மறந்து அவனுக்கு உதவத் தீர்மானித்து ஒரு படையை துவாரசமுத்திரத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால், இந்த உதவியை வீர வல்லாளன் நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், நன்றி மறந்து சுந்தர பாண்டியனுக்கு உதவத் தீர்மானித்தான். தன்னோடு சமாதானமாகப் போனால், மதுரைப் படையெடுப்புக்கு உதவுவதாக மாலிக்கபூருக்கு ஓலை ஒன்றையும் அனுப்பினான் வீர வல்லாளன்.

ஆனால், மாலிக்கபூர் உடனே சமாதானத்தை ஏற்கவில்லை. அரண்மனையிலிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மதத்திற்கு வல்லாளன் மாறவேண்டும் அல்லது ஜிசியா வரியைச் செலுத்துவதாக ஒப்புக்கொள்ளவாவது வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைத்தான். இதை ஏற்றுக்கொண்டு 'தன்னுடைய பூணூலைத் தவிர' மற்ற எல்லாவற்றையும் டெல்லிப் படைகளிடம் ஒப்படைத்தான் வீர வல்லாளன். அந்தச் செல்வத்தோடு வல்லாளனின் மகன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றான். வீர வல்லாளன் மாலிக்கபூருக்கு வழிகாட்ட, கில்ஜியின் படைகள் தமிழகத்தில் நுழைந்தன.

'சர்மலி மற்றும் தபார்' கணவாய்கள் வழியாக இந்தப் படைகள் தமிழத்தில் நுழைந்தன என்று அமீர் குஸ்ரு தெரிவிக்கிறார். இவை, சேர்வராயன் மலைகள் மற்றும் தோப்பூர்க் கணவாயாகவே இருக்கவேண்டும். இவற்றைக் கடந்து காவிரியின் கரையில் அந்தப் படைகள் முகாமிட்டன. துவாரசமுத்திர நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த வீர பாண்டியன், தன் படைகளோடு பாண்டிய நாட்டின் வடக்கெல்லையான ஜெயங்கொண்ட சோழபுரத்தில் முகாமிட்டிருந்தான். அங்கே விரைந்த மாலிக்கபூரின் படைகளுக்கும் பாண்டியப் படைகளுக்கும் கடும் போர் மூண்டது. போரில் தோல்வியடைந்த வீர பாண்டியன் கண்ணனூர் கொப்பத்தை (சமயபுரம்) நோக்கிப் பின்வாங்கினான். கில்ஜியின் படைகள் அங்கேயும் அவனைத் துரத்திச் சென்றன. அப்போது பாண்டியப் படைகளில் இருந்த இஸ்லாமியப் பிரிவு, அவர்களுக்குத் துரோகம் செய்து மாலிக்கபூரிடம் சேர்ந்து கொண்டது.   எனவே இங்கேயும் பாண்டியர்கள் தோல்வியடைந்தனர். இப்போது பாண்டியன் மீண்டும் மேற்கு நோக்கிச் சென்று கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தான். மூன்றாவது முறையாக மாலிக்கபூர் அங்கே அவனைத் தோற்கடித்தான். வீர பாண்டியன் கொல்லி மலைகளுக்குத் தப்பிச் சென்றான். இந்தத் தோல்விகளைப் பற்றி அறிந்த சுந்தர பாண்டியன் இப்போது மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான்.

பாண்டியப் படைகளை நிர்மூலமாக்கியது மட்டுமல்லாமல், போகும் இடங்களையெல்லாம் கொள்ளையடித்த மாலிக்கபூரின் பார்வை இப்போது சிதம்பரத்தை நோக்கித் திரும்பியது. 'பிரும்மஸ்தபுரி' (பிரும்மபுரி - சிதம்பரம்) என்ற இடத்தில் பெரும் செல்வமும், தங்கமும், யானைகளும் இருப்பதாக அறிந்த மாலிக்கபூர் சிதம்பரத்தை இரவில் தாக்கினான். கோவில் தரைமட்டமாக்கப்பட்டது. பொன்னும் பொருளும் 250 யானைகளும் கைப்பற்றப்பட்டன. 'விக்ரக வழிபாட்டாளர்கள், பிராமணர்கள் ஆகியோரின் தலைகள் கழுத்திலிருந்து உருண்டன, இரத்த ஆறு ஓடியது' என்று மாலிக்கபூரோடு வந்த வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். லிங்கத் திருமேனியை உடைத்ததோடு மட்டுமல்லாமல், 'தியோ நாராயண்',  சித்திரகூடப் பெருமாளையும் அவர்கள் வீழ்த்தினர்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, மாலிக்கபூரின் படைகள் 'தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல'  அவனுடைய நண்பனாக இருந்த சுந்தர பாண்டியன் ஆட்சி செய்த மதுரையை நோக்கி விரைந்தன. வழியிலுள்ள ஆலயங்கள் இடிக்கப்பட்டன. ஊர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நிலைமையைப் புரிந்து கொண்ட சுந்தர பாண்டியன், மதுரையை விட்டு ஓடிப்போனான். மதுரைக் கோவிலைத் தாக்கி அழித்த மாலிக்கபூர், அங்கிருந்து எண்ணிலடங்கா அளவு பொன்னையும், விலையுயர்ந்த நவமணிகளையும், 512 யானைகளையும், குதிரைகளையும் கைப்பற்றி டெல்லி திரும்பினான்.

                                                                                                                                         (அடுத்து)